இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சாதகமான முடிவுகளே கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய முதல்வர், ” ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாதத்தில் பல ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாம் போரிடும் தருணத்தில் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ஊரடங்கு தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் விவரங்களை வழங்கினார். மேலும், ஊரடங்கை ஒரு மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநில அரசுகள் மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற இருப்பதாக தெரிவித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிப்பு கோரிக்கையை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்க வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.