சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு கோவில் உண்டியலை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த காமராஜர் சாலையில் உள்ள அரசு அச்சக குடியிருப்பு பகுதியில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் சென்ற பூசாரி கோவிலின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. சில்லரை காசுகள் மட்டும் திருடவில்லை கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு கைவரிசை காட்டப்பட்டுள்ளது. கொள்ளையன் விட்டு சென்ற போர்வை ஒன்றை கைப்பற்றிய புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் கோவில் உண்டியல் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.