மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா 300க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் சிவராத்திரி விழாவையொட்டி மாலை 6 மணி முதல் நான்கு கால பூஜை நடைபெற்று சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று ஸ்வாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் மருதா நாட்டியாஞ்சலி குழுவினரின் பத்தாவது ஆண்டு மகா நாட்டியாஞ்சலி நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். இந்த சிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்துள்ளனர். இந்த விழாவின் ஏற்பாடுகளை மருதா நாட்டியாஞ்சலி குழுவினர், ஆலய பணியாளர்கள், ஆலய கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கவனித்துக் கொண்டுள்ளனர்.