Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநில முதல்வருக்கு கோவில்… ராமர் கோவில் பூமி பூஜை விழா அன்று கட்டுமான பணி தொடக்கம்…!!

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோயில் கட்டும் பணிகளை ஆளும் கட்சி எம்எல்ஏ நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

ஆந்திர மாநிலத்தில் குறைவான வயதில் முதல்வர் பதவியில் இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயலாற்றி வருகிறார். அவர் கொடுத்துள்ள நலத்திட்டங்களில் குறிப்பாக அவரது ‘நவரத்தினா’ திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட, மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முடிவு செய்து, கோபாலபுரம் மண்டலம், ராஜம்பாளையம் கிராமத்தில் ஓர் இடத்தை பிடித்து அங்கு ஜெகனுக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்று நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோபாலபுரம் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ தலாரி வெங்கட் ராவ் பங்கேற்று, ஜெகன்மோகன் ரெட்டி கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தார்.

இது பற்றி கோயில் பணி நிர்வாகிகள் கூறுகையில், “பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஜெகன் சிறப்பாக செயலாற்றி வருகிறார். கொரோனா பிடியில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆந்திராவில் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இதனால் முதல்வருக்கு கோயில் கட்ட நாங்கள் தீர்மானித்தோம். இங்கு அவரது சிலையை வைத்து தினசரி பூஜைகள் செய்வோம்” என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து எல்எல்ஏ தலாரி வெங்கட் ராவ் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி தொடங்கிய அதேநாளில் இக்கோயில் பணிகளை தொடங்கி வைத்தது எனது அதிர்ஷ்டம்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |