போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ, ஹெட்டிங் முறையில் கோல் அடிப்பது எப்படி என்று செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு கற்றுத் தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
சர்வதேச கால்பந்து அரங்கில் தலைசிறந்த வீரராகத் திகழும் போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில், நடைபெற்ற சீரி ஏ லீக் போட்டியில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கணக்கில் சாம்ப்டோரியா அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்த நிலையில், ஆட்டத்தின் 45ஆவது நிமிடத்தில் ரொனால்டோ சுமார் 8.3 அடி (2.மீட்டர் உயரம் பறந்து ஹெட்டிங் முறையில் கோல் அடித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தற்போது விடுமுறையில் இருக்கும் அவர், உடற்பயிற்சிக் கூடத்தில் செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு தலையால் கோல் அடிப்பது எப்படி என்று வித்தையைக் கற்றுத்தந்துள்ளார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரொனால்டோ, “ஜோகோவிச்சிற்கு எப்படி தாவ வேண்டும் என பயிற்சி வழங்கினேன். உன்னை சந்தித்து உன்னுடன் பயிற்சி எடுத்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது” என குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு ஜோகோவிச், நன்றி தெரிவித்தும், சிறப்பான வீரர்களிடமிருந்து இதைக் கற்றுக்கொண்டது எனக்கு பெருமையாக உள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் ரிட்வீட் செய்திருந்தார். ஜோகோவிச்சிற்கு ஹெட்டிங் முறையில் கோல் அடிப்பது எப்படி என ரொனால்டோ சொல்லித்தந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
https://twitter.com/OBIORAOFFICIAL/status/1207375419558768645
😅😂🤪 Thanks my friend, honored to learn from the best!! 💪🏼 @Cristiano https://t.co/u5KI0cl9CM
— Novak Djokovic (@DjokerNole) December 27, 2019