வருகின்ற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் 20ஆவது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் உள்ள 118 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கட்சிக்கொடி ஏற்றிவைத்த பின்பு அலுவலகத்தில் கூடியிருந்த 500க்கும் அதிகமான தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை மக்களுக்கு இலவச நலத்திட்ட உதவிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழங்கினார். விழாவில் விஜயகாந்த் பேசுகையில், ‘அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துகள் கூறி, நிர்வாகி ஒருவரின் பெயரைச் சொல்லி நலம் விசாரித்தார்.
தொடர்ந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘வருகின்ற 2021ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆட்சியமையும்’ என்றார். அதேபோல் தேமுதிக போல் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும்; இல்லையென்றால், எதிர்கட்சிகள் அதிக தொகுதிகள் வெற்றி பெற்றுவிடும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.