தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களின் ஆட்சியர்களை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 5 மாவட்டங்களுக்கான தேர்தல் நடத்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களை மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த தேர்தல் அலுவலர்கள் 5 மாவட்டங்களில் மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்டதால், அதிலிருந்து பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அந்த 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களே அந்தந்த தேர்தல் அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.