நடிகர்கள் விஜய், கமல் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று பேனர் சங்கதலைவர் சுரேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த 12ம் தேதி பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து பேனர் அச்சடித்த கடைக்கு மாநகராட்சி சீல் வைத்தது மட்டுமில்லாமல் அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பியதையடுத்து பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பேனர் வைக்க கூடாது அதன்பின் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமின்றி நடிகர் விஜய், சூர்யா கமல் ஆகியோரும் ரசிகர்கள் இனி யாரும் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தினர்.
அதை தொடர்ந்து சென்னையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பல இடங்களில் அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவில், சுபஸ்ரீ மரணம் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்ததோடு, பேனர் வைத்த குற்றவாளி மீது கோபப்படாமல் லாரி டிரைவர் மீதும், பேனர் டிசைன் செய்த கடைக்காரர் மீதும் கோபம் கொண்டு நடவடிக்கை எடுப்பது சரிதானா? என்றும் கேள்வியெழுப்பினார். இதே போன்று நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனும் பேனர் கடைக்காரருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் கட்டிடத்தில் தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் சங்க ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து டிஜிட்டல் பேனர் சங்கதலைவர் சுரேஷ் பேசுகையில், சுபஸ்ரீ மரணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்களை குற்றவாளிகள் போல் சித்தரிக்கின்றனர். நீதிமன்ற தீர்ப்பால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகியுள்ளது. நடிகர்கள் விஜய், கமல் ஆகியோர் எங்களுக்கு ஆதரவாக பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.