தஞ்சாவூர் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த தனியார் பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள மின்சார கம்பியின் மீது மோதியது. இதில் பேருந்தில் பயணித்த 3 பயணிகளின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
அதோடு அந்த பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தஞ்சாவூரில் பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.