தமிழக சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைப்பு திட்டங்கள் குறித்து பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கிராமங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.
தமிழகம் இதுவரை கண்டிராத வறட்சியினை சந்தித்த போதும் அதை சிறப்பாக சமாளித்து குடிநீர் பற்றாக்குறையை போக்கியது அதிமுக அரசு. உள்ளாட்சி அமைப்புகளுக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ. 11,000 கோடி நிதியை பெற்றுள்ளோம் என்றும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை விட அதிமுக ஆட்சியில் 3 மடங்கு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.