கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஜூன் 10ம் தேதி தொடங்கவிருந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்போடு வெளியாகியுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நேற்று இரவோடு 3ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மே 31 ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள் துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதில், ” பொது இடங்களிலும் பணி இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம். ஹோட்டல்கள் மது பான கூடங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு அரங்கை திறக்க அனுமதிக்கப்படுகிறது. திருமண விழாக்களில் அதிகபட்சம் 50 பேர் வரையில் பங்கேற்கலாம்.
இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதோடு மேலும் சிலதளர்வுகளை அனுமதித்திருந்தது. உள்ளூர் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்பன உள்ளிட்ட சில தளர்வுகளை அனுமதித்துள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎல் போட்டிகளை ஒத்திவைப்பதாக கிரிக்கெட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.