கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 23ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழப்பதற்கான சரியான காரணத்தை கண்டறிய மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கும் அறிக்கையை விளக்கமாக ஆய்வு செய்து மாநில அளவிலான குழு முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் கொரோனோவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து வரும் 23ம் தேதி முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,596ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 635 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் 33 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. 23 மையங்கள் அரசு மருத்துவமனையிலும், 10 மையங்கள் தனியார் மருத்துவமனையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.