இந்தியா மற்றும் இலங்கை இடையே அதிகாரிகள் மட்டத்திலான கூட்டு நடவடிக்கை குழு பேச்சுவார்த்தை நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவுக்கு மீன்வளத்துறை செயலாளர் ஜதிந்திரநாத் ஸ்வைன் மற்றும் இலங்கை குழுவுக்கு மீன்வள அமைச்சக செயலாளர் ரத்னாயகே தலைமை தாங்கி உள்ளனர். இதில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இலங்கையிடம் தமிழக மீன்பிடி படகுகளை அணுகும் போது உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையிலும், அவர்களை பிடிபர்தற்கு துணை இராணுவத்தை பயன்படுத்துமாறும், கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. பிரகடனம் மீனவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகுமாறும் கேட்டுக்கொண்டனர். மேலும் முக்கியமான கடல் வழித்தடங்களில் கடலோர காவல்படை கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், சுற்றுச்சூழலுக்கோ, மீன்வளத்துக்கோ கெடுதல் இல்லம் மீன்பிடிக்கும் முறையை பின்பற்ற தமிழக மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தது.
இதற்கு இலங்கை குழு தமிழக மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளையும், மீன்பிடி முறையையும் பின்பற்றுவதாக குற்றம் சட்டயுள்ளது. மேலும் இரு நாடுகளும் இணைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கான எல்லா உதவிகளையும் இந்திய குழு செய்யும் என்று உறுதியளித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பலப்பிரயோகம் செய்வதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் மீனவர்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும் என்பதையும் ஏற்று கொண்டனர். இதற்கிடையில் இன்று 3 நாட்கள் பயணமாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கை செல்கிறார்.