ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தன் முகத்தை மூடிக்கொண்டு தான் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டும் என்று தலிபான்கள் அறிவித்திருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அதன்படி வெளியிடங்களில் பெண்கள் தலையிலிருந்து கால் வரை மூடிக் கொள்ளும் வகையில் பர்தா அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். மேலும் அரசு துறையில் பணியாற்றும் பெண்கள் கட்டாயமாக பர்தா அணிய வேண்டும், இல்லையெனில் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்கள்.
இது மட்டுமல்லாமல் அரசாங்கப் பணியில் இருக்கும் ஆண்களின் மனைவி, மகள் பர்தா அணியாமல் பொது இடங்களுக்கு சென்றால் அந்த ஆண்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.
மேலும், பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படாது என்று அறிவித்ததோடு, மேல்நிலை கல்வி கற்கவும் தடை விதித்தனர். இந்நிலையில் அந்நாட்டில் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண்கள் தங்கள் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள்.