சென்னை உயர் நீதிமன்றம் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நவம்பர் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளின் நலனை கருத்தில் கொண்டு மலை வாசஸ்தலங்களில் மதுபான பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அந்த மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இத்திட்டமிடானது டாப் ஸ்லிப், மேகமலை, கொல்லிமலை, சிறுமலை, ஏற்காடு மற்றும் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்து தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நீதிபதி சோதனை முறையில் முதலில் 2 மாவட்டத்தில் காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்தி 2 மாதங்களுக்கு அந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.