7-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இத்தொடரில் முதல் சுற்று மற்றும் சூப்பர்12 சுற்று முடிவில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சூப்பர்12 சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன .இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்ற ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
அதேசமயம் நியூசிலாந்து அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருப்பது இதுவே முதல் முறையாகும் .இதனால் இன்றைய போட்டியில் எந்த அணி கோப்பையை கைப்பற்றினால் அவர்களுக்கு இது முதல் டி20 உலக கோப்பையாக இருக்கும் .கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி நடந்த ‘சூப்பர்12’ சுற்றில் 4 வெற்றி ,ஒரு தோல்வியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில் , டேரில் மிட்செல்,கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். அதேபோல் பந்து வீச்சிலும் டிரென்ட் போல்ட், டிம் சவுதி , ஆடம் மில்னே ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றன. இதனிடையே சமீபத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது .
இதனால் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி மகுடம் சூடினால் அந்த அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமையும்.அதேசமயம் 2015ஆம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை அடைந்தது .இதனால் இன்றைய போட்டியில் இதற்கு பதிலடி கொடுக்க இது சரியான தருணமாகும் .இதையடுத்து ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடந்த சூப்பர் 12 சுற்றில் 4 வெற்றி ,ஒரு தோல்வியுடன் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது .குறிப்பாக நடப்பு டி-20 உலக கோப்பை தொடரில் நடந்த சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத பாகிஸ்தான் அணியை அரை இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது .
மேலும் பேட்டிங்கில் டேவிட் வார்னர்,மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர் .எனவே இரு அணிகளும் ஏறக்குறைய சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது . இதில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூபாய் 12 கோடியும் ,இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூபாய் 6 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது .இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது.