டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து துவக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் ஆலன் (4) ஷாஹின் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியுடன் தொடங்கிய நிலையில், அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆகி அவுட் ஆனார்.. இதையடுத்து கேன் வில்லியம்சன் – கான்வே இருவரும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். அதன்பின் பவர் பிளே கடைசி ஓவரின் கடைசி பந்தில் துரதிஷ்டவசமாக கான்வே (21) ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 6 ரன்னில் அவுட் ஆனார். நியூசிலாந்து அணி 8 ஓவரில் 49/3 என இருந்தது.
இதையடுத்து கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் விக்கெட் இழக்காமல் பொறுப்புடன் ஆடினர்.. மிட்செல் சற்று அதிரடியாக ஆடினார். கடைசி கட்ட நேரத்தில் அடிக்க வேண்டிய போது அஃப்ரிடி வீசிய 17வது ஓவரில் கேன் வில்லியம்சன் 46 (42) போல்ட் ஆகி அவுட் ஆனார். இதையடுத்து வந்த நீசம் மிட்சலுடன் கைகோர்த்து ஆடினார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல் 35 பந்துகளில் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்) 53 ரன்களுடனும், நீசம் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் ஷாஹின் அஃப்ரிடி 2 விக்கெட்டுக்களை, முகமது நவாஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.. கடைசியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் 15 – 20 ரன்கள் நியூசிலாந்து அணி குறைவாகவே எடுத்தது.