Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி….! பார்முக்கு வந்த ராகுல்…. “மீண்டும் அரைசதம் அடித்த கோலி”…. வங்கதேசத்திற்கு 185 ரன்கள் இலக்கு.!!

வங்கதேசத்துக்கு இந்திய அணி 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி முதல் விளையாடி வருகிறது.. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர் இதில் ஹசன் மஹ்மூத் வீசிய 4ஆவது ஓவரில் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆனார். ரோஹித் முன்னதாக தஸ்கின் அகமது வீசிய மூன்றாவது ஓவரில் லெக் சைட் திசையில் அடித்தபோது ஹசன் மஹ்மூத் எல்லைக்கோடு அருகே கேட்ச் விட்டிருப்பார். அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளாத ரோஹித் கேட்ச் விட்ட ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில்  யாசிர் அலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து வந்த விராட் கோலி, ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். தஸ்கின் அகமது வீசிய முதல் ஓவரில் 6 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்திருந்த ராகுல், அதன்பின் ஷோரிபுல் இஸ்லாம் வீசிய 2ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து அதிரடியை தொடங்கினார் ராகுல். அதைத் தொடர்ந்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராகுல் அதிரடியாக அரை சதம் அடித்தார். 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் அல் ஹசன் வீசிய 10ஆவது ஓவரில் அவுட் ஆனார்.

இதையடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் கோலியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார்.. சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 30 ரன்கள் விளாசிய நிலையில் ஷகிப் ஓவரில் அவுட் ஆனார். 13.3 ஓவரில் 116/3 என இந்திய அணி இருந்தது. இதையடுத்து எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா 5 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து 17வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் ரன் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து வந்த அக்சர் பட்டேலும் 19 ஆவது ஓவரின் போது 7 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இப்படி அடுத்தடுத்து கடைசி கட்ட நேரத்தில் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் வெளியேறியதால் ரன்ரேட் சற்று குறைந்தது. அதன்பின் அஸ்வின் – கோலி இருவரும் ஜோடி சேர்ந்து ஆடினர். இருப்பினும் கோலி மறுமுனையில் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். 19ஆவது ஓவரில் கோலி 5 மற்றும் 6ஆவது பந்துகளில் ஒரு பவுண்டரி சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது.

பின் ஷோரிபுல் இஸ்லாம் வீசிய இறுதி ஓவரில் அஸ்வின் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. இந்திய அணி 20 முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. விராட் கோலி 44 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 64 ரன்களுடனும், அஸ்வின் 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கியுள்ள வங்கதேச அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் குவித்து வலுவான தொடக்கத்தை கொடுத்துள்ளது.

Categories

Tech |