Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : திக்… திக்… பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி…. 1 ரன்னில் வென்ற ஜிம்பாப்வே அணி..!!

ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை  வீழ்த்தியது.

8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக மாதேவேரே மற்றும் கிரேக் எர்வின் இருவரும் களமிறங்கினர்..

ஜிம்பாப்வே அணி நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில், 5ஆவது ஓவரில் எர்வின் 19 ரன்களுக்கு அவுட் ஆனார். 42 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது ஜிம்பாப்வே. அதன்பின் அடுத்த ஆறாவது ஓவரில் மற்றொரு துவக்க வீரர் மாதேவேரே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்தா மில்டன் ஷும்பா 8 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சீன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா இருவரும் கைகோர்த்து சிறிது நேரம் நிலைத்து நின்ற நிலையில், சதாப்கான் வீசிய 14 வது ஓவரில் 5ஆவது பந்தில் சீன் வில்லியம்ஸ் 31 ரன்களில் அவுட் ஆனார்.

அதன் பின் அடுத்த பந்திலேயே கேப்டன் ரெஜிஸ் சகப்வா டக்அவுட் ஆகி வெளியேறினார்.. அதனைத் தொடர்ந்து முகமது வசிம் வீசிய 15 வது ஓவரில் 3ஆவது பந்தில் சிக்கந்தர் ராசா (9), 4ஆவது பந்தில் லூக் ஜாங்வே டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். அடுத்தடுத்து தொடர்ந்து 4 விக்கெட் விழுந்ததால் ஜிம்பாப்வே அணி  14.4 ஓவரில் 95/7 என திணறியது. பின் பிராட்லி நீல் எவன்ஸ் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் ரியான் பர்ல் 10* மற்றும் ரிச்சர்ட் ங்கராவா 3* ரன்களும் எடுத்து  அவுட் ஆகாமல் களத்தில் இருக்க,  20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகள் இழந்து 130 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது வசிம் 4 விக்கெட்டுகளும், சதாப் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறிங்க தொடக்க வீரர் கேப்டன் பாபர் அசாம் 4 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். இதையடுத்து ஷான் மசூத் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தனர். அதனைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் 14, இப்திகார் அகமது 5 ரன்கள் என ஆட்டமிழந்தனர்.

இதைடுத்து சிக்கந்தர் ராசா வீசிய 14 வது ஓவரில் 4ஆவது பந்தில் சதாப் கான் 17, 5ஆவது பந்தில் ஹைதர் அலி 0 என அடுத்தடுத்து அவுட் ஆனதால் ஆட்டம் சற்று ஜிம்பாப்வே அணிக்கு திரும்பியது. அதனைத் தொடர்ந்து சிக்கந்தர் ராசாவின் 16ஆவது ஓவரில் ஒருபுறம் நிலைத்து ஆடி வந்த சான் மசூத் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். 15. 1 ஓவரில் 94/6 என்று பரிதவித்தது பாகிஸ்தான்..  அப்போது முகமது நவாஸ் – முகமது வசீம் இருவரும் ஜோடி சேர்ந்து  தட்டி தட்டி கொண்டு சென்றனர். கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டபோது, ரிச்சர்ட் ங்கராவா வீசிய 19 ஆவது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது.

நீல் எவன்ஸ் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் 3 ரன்கள் கிடைத்தது. 2ஆவது பந்தை பவுண்டரி அடித்தார் முகமது வசீம். 3ஆவது பந்து டாட் ஆக, 4ஆவது பந்தில் 1 ரன் கிடைத்தது. கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டபோது நவாஸ் தூக்கி அடிக்க முயன்ற போது மிட் விக்கெட் திசையில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட ஷாஹீன் அப்ரிடி அடித்து ஓட ரன் ஆனார். இதனால்  1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 2ஆவது முறையாக தோல்வியை தழுவியுள்ளது பாகிஸ்தான் அணி..

 

Categories

Tech |