டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி புதிய சாதனை படைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக இந்தியா, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நேற்றைய போட்டியின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் இறுதி கட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 24 ரன்கள் தேவைப்பட்டது .
அப்போது கரிம் ஜனத் வீசிய 19-வது ஓவரில் பாகிஸ்தான் அணியில் ஆசிப் அலி 4 சிக்சர்கள் அடித்து விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார் .இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆசிப் அலி 7 பந்துகளில் 25 ரன்கள் குவித்து அசத்தினார் .அதோடு ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன்மூலம் டி20 போட்டியில் குறைந்த பந்துகளில் ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நிதாஹஸ் கோப்பைக்கான தொடரில் இறுதி சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார் .தற்போது அவருடைய சாதனையை ஆசிப் அலி முறியடித்துள்ளார்.