சிரியா உக்ரைன் நாட்டுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
சிரியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் உக்ரைன் நாட்டுடனான உறவை துண்டிப்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, எங்கள் நாட்டுடனான உறவை முறிப்பதாக உக்ரைன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலடியாக உக்ரைன் உடனான தூதரக உறவை நாங்கள் துண்டித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சிரிய நாட்டில் போர் நடக்கிறது. அதிபரை எதிர்த்து அல்கொய்தா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் களமிறங்கியுள்ளனர். அவர்களுக்கும் அமெரிக்க நாட்டின் ஆதரவுடன் இயங்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே மோதல் நடக்கிறது. இதில் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து, இந்த போரில் 2015 ஆம் வருடத்தில் ரஷ்யா அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து சிரியா நாட்டின் அதிகமான பகுதிகள் அரசாங்க படையினரால் மீட்கப்பட்டது. இதனால், சிரியா, ரஷ்யாவுடன் நெருங்கிய உறவில் இருக்கிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யா, கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களிடம் உள்ள பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்தது. அதன் பிறகு, சிரியாவும் அந்த பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உக்ரைன், சிரியா நாட்டுடன் உறவை முறித்துக் கொண்டது என்பது நினைவு கூறத்தக்கது.