சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை நைஜீரியாவில் உள்ள ஒகுன் பகுதியில் இருக்கும் கால்நடை வளர்ப்பு மையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு அவரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியுள்ளனர். மேலும் அவருடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நைஜீரியர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை கடத்தி சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் கடத்தப்பட்டவர் ஏன் நைஜீரியாவிற்கு வந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது போன்ற கடத்தல் சம்பவங்கள் சமீபகாலமாக நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் போகோஹரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பணம் பறிக்கும் நோக்கில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் நைஜீரியா நாட்டில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறது.