சுவிட்சர்லாந்திலிருந்து, தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற பெண் பயணி பாதி ஆடையின்றி, நீரோடைக்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாடு கடந்த மாதம் தான், தடுப்பூசி செலுத்திய பிற நாட்டு சுற்றுலா பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க தொடங்கியது. எனவே, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பெண் கடந்த மாதம் 13 ஆம் தேதி அன்று தாய்லாந்திற்கு வந்துள்ளார். அதன்பின்பு இரு வாரங்கள் கழித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அவர் கடற்கரைக்குச் சென்றதை ஒரு நபர் பார்த்திருக்கிறார்.
இந்நிலையில் அந்தப் பெண், நேற்று நீரோடைக்கு அருகில், பாதி ஆடைகள் இல்லாமல் தார்ப்பாயால் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த உள்ளாடை, கால்சட்டை மற்றும் மொபைல் போன்ற பொருட்கள், அந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் கிடந்துள்ளது.
அந்தப் பெண்ணிற்கு 57 வயது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள் மேலும், அவர் உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.