சுவிட்சர்லாந்தில் 10,000 பலூன்களில் 2 லட்சம் பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை கட்டி வங்கி ஒன்று பறக்கவிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் EEk என்ற வங்கி அமைந்துள்ளது. தற்போது அந்த வங்கியின் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக அந்த வங்கி ஒரு திட்டத்தை முன்னெடுத்த போது அது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. அது என்னவென்றால், EEk வங்கி கடந்த சனிக்கிழமை Munchenwiler என்ற பகுதியில் சுமார் 2 லட்சம் பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை , சுமார் பத்தாயிரம் பலூன்களில் கட்டி காற்றில் பறக்க விட்டது.
சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் குதூகலமடைவார்கள் என்ற வகையில் இந்த செயல் மேற்கொள்ளப்பட்டது. பலூன்களில் இணைக்கப்பட்டுள்ள வவுச்சர்களை வங்கியில் கொண்டு வந்து கொடுத்தால் 20 பிராங்குகளை வங்கி அவர்களுக்கு கொடுக்கும். ஆனால் வங்கியின் இந்த திட்டம் தோல்வியடைந்துள்ளது . ஏனெனில் அப்பகுதியில் உள்ள சிலருக்கு மட்டுமே பலூன்கள் கையில் கிடைத்துள்ளது .
பெர்ன் மண்டலத்தை தாண்டி எமெண்டல், ஆர்காவ்,லாங்கேந்தல் போன்ற மற்ற மண்டலங்களுக்கு மீதமுள்ள பலூன்கள் பறந்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பலூன்களை வானில் பறக்க விடுவதற்காக அந்த வங்கி ஒத்திகையும் நடத்தி உள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் தலைவர் Danniel Pfanner கூறியதாவது, “பெர்ன் மண்டலத்தில் வசிக்கும் மக்களுக்காகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது . ஆனால் அவர்களுக்கு பலூன்கள் கிடைக்கவில்லை. இதனால் நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.