சுவரில் விளம்பரம் அழிக்கப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை குருந்தன்கோடு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி வாழ்த்து விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியினர் அழித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த அமர்நாத் பிரபாகர், கார்த்திக் மற்றும் 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா கட்சி சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும்பாலானோர் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த உதவி துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனையடுத்து சுமுக முடிவு ஏற்படுத்தப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பாஜக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இடையில் மீண்டும் இதுகுறித்து ஆற்றுப் பாலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீரென சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனைதொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.