சோதனைச்சாவடியில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை யானையால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், ஆசனூர், தாளவாடி உட்பட மொத்தம் 10 வனசரகங்கள் இருக்கின்றது. இங்கு இருக்கக்கூடிய வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இவற்றில் ஆசனூர் வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது.
இந்த சாலையை அவ்வப்போது யானைகள் கடப்பது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி வழியாக கரும்பு பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை யானைகள் வழிமறித்து அதிலுள்ள கரும்புகளை தின்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கார்ப்பள்ளம் சோதனைச் சாவடிக்கு யானை வந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாக வந்த வண்டிகளை வழிமறித்து பின் தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனால் அந்த சாலையின்இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. அதன்பின் ஒற்றையானை சாலையில் சிறிது நேரம் சுற்றி திரிந்தபின் தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதன் காரணமாக அந்த சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.