தேனி மாவட்டத்தில் தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கூறி மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரிய குளத்தை அடுத்துள்ள டீ .கல்லுப்பட்டியில் செல்ல முருகு(47) என்பவர் அவரது மனைவி மற்றும் மகன் தினேஷ் குமாருடன்(26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்ல முருகு பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி(62) என்பவருக்கும் செல்ல முருகுவிற்கு இடதகராறு காரணமாக முன்பகை இருந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வெள்ளைசாமியின் மகன்களான செல்லமுத்து(35), செல்லப்பாண்டி(30)மற்றும் அவரது உறவினர்கள் அவர்களது இடத்தில் செட் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அங்கிருந்த செல்லமுருகு மற்றும் தினேஷ்குமார் எங்கள் இடத்தில் உள்ள சுவற்றிற்கு சேதம் ஏற்படுத்தாமல் வேலை செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வெள்ளைசாமியின் மகன்கள் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து செல்ல முருகு மற்றும் தினேஷ்குமாரை தாக்கியுள்ளனர். இந்நிலையில் தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக அவரது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென செல்லமுருகு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார் உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது தந்தையை அனுமதித்துள்ளார். ஆனால் செல்ல முருகு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தினேஷ்குமார் தென்கரை காவல்நிலையத்தில் என் தந்தை சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வெள்ளைச்சாமி, செல்லபாண்டி, செல்லமுத்து மற்றும் அவர்களுடன் இருந்த செல்லம், பிரகாஷ், அஜித் என மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.