இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அமெரிக்காவில் தான் வசிக்கும் குடியிருப்பில் இருந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார். இவர் தற்சமயம் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் நான்கு வயது மகளும் இருந்தனர். இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலை 5.30 மணியளவில் பாலாஜியின் மகளான ஆர்த்தி பால்கனியில் நின்று அழுது கொண்டிருந்தாள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது பாலாஜியும் ஆர்த்தியும் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளனர். உடனே போலீசார் அவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பாலாஜி ஆர்த்தியை குத்தி கொன்றுவிட்டு தானும் அதே கத்தியால் குத்தி தற்கொலை செய்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மகாராஷ்டிராவில் உள்ள பாலாஜியின் தந்தையும் தொழிலதிபருமான பரத் ருத்ரவார் போலீசாரிடம் பேசியதாவது “கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை.
அவர்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தனர். இப்போது இதுகுறித்து நான் எதையும் பேச விரும்பவில்லை. எனது மகன் மற்றும் மருமகளின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மஹாராஷ்டிரா வந்து சேருவதற்கு பத்து நாட்கள் ஆகிவிடும். அதுவரை எனது பேத்தி எனது மகனின் நண்பர் வீட்டில் பத்திரமாக இருப்பாள்” என அவர் கூறியுள்ளார்.