துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவின் தோட்டத்தில் வேலை செய்த டிராக்டர் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட போடந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (50). இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவிற்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த 5வருடங்களாக டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு சென்ற முனியாண்டி இறந்து விட்டதாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இறந்தவரின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் முனியாண்டியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகக் கூறி, குச்சனூர் விலக்கில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இறந்த பின்னர் எங்களுக்கு சொல்வதில் உள்ள மர்மம் என்ன? உயிரிழந்த முனியாண்டிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இன்று அவர்களது குடும்பம் நிராதரவாக உள்ளது. முனியாண்டியின் இறப்பிற்கு ஓபிஎஸ்-ன் தம்பி தான் பொறுப்பு என்று கோபத்துடன் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தூராஜ் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவின் மீது கைலாசபட்டி கோவில் பூசாரி நாகமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவரது தோட்டத்தில் வேலை செய்து வந்த டிராக்டர் ஓட்டுநரின் இறப்பில் சந்தேகம் எழுந்து உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.