மல்யுத்த வீரர் சுஷில் குமார் சக வீரரான சாகர் தன்கட் ராணா என்பவரை கொலை செய்ததையடுத்து அவரது பெற்றோர்கள் சுஷில் குமாரை தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளனர்.
மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். இதில் மோசமாக காயமடைந்து கீழே விழுந்த தான் கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து தான்கட் உயிரிழந்ததை கொலை வழக்காக மாற்றி போலீசார் சுஷில் குமாரை தீவிரமாக தேடிவந்தனர்.
அவர் தலைமறைவாகி இருந்ததை அடுத்து ஹரியானா, உத்தரகாண்ட் என்ற பல்வேறு மாநிலங்களில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்தது. அதுமட்டுமில்லாமல் அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு எனவும் டெல்லி போலீசார் தெரிவித்திருந்தார். பல தேடுதலுக்கு பின்னர் அவர் டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்குப் பிறகு ராணாவின் பெற்றோர் சுஷில் குமார் மல்யுத்த குரு என்று சொல்வதற்கு சிறிது கூட தகுதி இல்லாதவர் என்றும், அவரது தேசிய பதக்கங்கள் அனைத்தையும் அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். அதுமட்டுமில்லாமல் சுஷில் குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுவார். எனவே அரசு நேர்மையாக வழக்கை விசாரித்து எங்களுக்கு தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், அவரை தூக்கில் போட வேண்டும் என்று உயிரிழந்தவரின் பெற்றோர் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.