தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கடந்த 2020-21 ஆம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த 2707.05 ரூபாயை விட கூடுதல் ஊக்கத்தொகையாக டன் ஒன்றிற்கு 192.50 ரூபாய் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு 2,900 ரூபாய் கிடைக்கிறது. அதன் பிறகு கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 95,000 எக்டேராக இருந்த கரும்பு பதிவு 2022-23 ஆம் ஆண்டில் 1,40,000 எக்டேராக இருப்பதோடு கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 139.15 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கரும்பு ஊக்க தொகையாக அறிவித்த 2755 ரூபாயை காட்டிலும் கூடுதலாக மாநில அரசு ஒரு டன்னுக்கு 195 ரூபாய் வழங்குகிறது. கடந்த 7-ம் தேதி அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு கரும்பு விவசாயிகளின் நலனுக்காக 199 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 2022-23 ஆம் ஆண்டில் தனியார் மற்றும் கூட்டுறவு ஆலைகளில் பதிவு செய்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 2950 கிடைக்கும். இதன் மூலம் 1.21 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.