சென்னை உயர் நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்க மாநில தலைவர் கு. பாரதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். குறிப்பாக சென்னை மாநகராட்சி அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேலை பார்க்கும் 1500 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி 424 ரூபாயை உயர்த்தி வழங்குவதோடு அவர்களை ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க குழு அமைப்பதோடு, அதுவரை தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் 18,401 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை மாநகராட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இந்த தடையை நீக்க கோரி சங்கம் சார்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவ்வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் குழு அமைத்து ஆலோசனை செய்வதற்கு 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்ததோடு, தீர்ப்பு வரும்வரை தூய்மை பணியாளர் களுக்கு தினக்கூலி 424 ரூபாயை 500 ரூபாயாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.