டெல்லி சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி பேரவையின் பதவிக்காலம் வருகின்ற பிப்ரவரி 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுனில் அரோரா பேசியதாவது, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் உடன் ஆலோசிக்கப்பட்டது. டெல்லியில் 1 கோடியே 46 லட்சத்து 92 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக 90,000 அதிகாரிகள் பயன்படுத்தப்பட உள்ளனர்.மூத்த குடிமக்களுக்கு வாக்களிக்க வந்து செல்வதற்கு வசதியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 13,750 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்படும். டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன என்று தெரிவித்தார். இறுதியாக தேர்தல் நாளை அறிவித்தார்.
வேட்புமனு தாக்கல் – ஜனவரி 14ஆம் தேதி
வேட்புமனு கடைசி நாள் – ஜனவரி 21 ஆம் தேதி
வேட்புமனு ஆய்வு (மறு பரிசீலனை) – ஜனவரி 22 ஆம் தேதி
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் – 24 ஆம் தேதி
வாக்குப்பதிவு – பிப்ரவரி 08
வாக்கு எண்ணிக்கை – பிப்ரவரி 11
மேலும் சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.