10 வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்த பெண்ணின் எலும்புக்கூடு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் பல பேர் தங்கள் குடும்பத்தினரை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி மியாமி கடற்கரை ஓரத்தில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தடவியல் மற்றும் மரபணு சோதனையில் உட்படுத்தியபோது அது சுனாமியில் காணாமல் போன 61 வயதான நட்சுகோ ஒகுயாமா என்ற பெண்ணின் எலும்புக்கூடு என்பது உறுதியானது. ஜப்பானில் சுனாமி வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் 2,500க்கும் மேற்பட்டவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் என்றாவது வீடு திரும்ப மாட்டார்களா என்று குடும்பத்தினர் ஏக்கத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தனது தாய் நட்சுகோ ஒகுயாமாவின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த நபருக்கு அவரது மகன் கண்ணீருடன் நன்றி கூறினார். சுனாமியின் 10வது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதற்கு இன்னும் சிறிது நாட்களே உள்ளது. இந்நிலையில் எனது தாயின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்போது நான் நிம்மதியாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.