நீட் தேர்வு காரணமாக மதுரை மாவட்ட மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மு க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நீட் தேர்வு குறித்து அச்சமும் அதை வைத்து தொடரும் தற்கொலைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. மாணவி அனிதாவில் தொடங்கி தற்போது துர்கா வரை நீட் தேர்வு குறித்த அச்சம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய பல தலைவர்களும் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வு என்பது கட்டாயம் என்று உறுதியாக நிற்கிறது. இதனால் தற்கொலைகள் என்பது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் துர்கா என்ற மாணவியின் மரணம் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு” என்று மாணவி ஜோதிஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு தேர்வு என்பது, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை வரை நமக்கு உணர்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் கூறுவதாகவும், நீட் என்பது ஒரு தேர்வே இல்ல என்பதை, மீண்டும் மீண்டும் தெரியப்படுத்தவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.