பெரம்பலூரில் வங்கி ஊழியரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் வசந்த் என்பவர் வசித்து வந்தார். இவர் தியேட்டர் மேலாளராக திருச்சியில் பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலையை இழந்து வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவிலங்கை கிராமத்தில் வசித்து வரும் சாந்தி என்பவருக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. சாந்தி வங்கி ஊழியராக அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற 4 மாதங்களுக்கு முன்பு சாந்தியை, வசந்த் இரண்டாவது திருமணம் செய்து உள்ளார்.
வசந்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் சாந்தி வேலைக்கு நேற்று காலையில் புறப்பட்டுள்ளார். அவரை வசந்த் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து ஏற்றி விட்டு வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் சாந்தி அவரிடம் எதுவும் பேசாமல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த சாந்தி, வசந்தை அழைத்துச் செல்வதற்காக போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால் அவர் வெகு நேரமாகியும் போனை எடுக்கவில்லை. அதன் பின் வீட்டிற்கு சென்ற சாந்தி கதவை தட்டி பார்த்துள்ளார். அவர் கதவையும் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சாந்தி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு வசந்த் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சாந்தி பெரம்பலூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.