மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மைப் பணியாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருபவர் வண்டியூரைச் சேர்ந்த வேல்முருகன். இவர் நேற்று மாலை பணி முடிந்ததும் வீடு திரும்பாமல் கலெக்டர் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். இவருடன் பணிபுரிந்த அனைவரும் மாலையில் வீட்டுக்கு சென்றுள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வழக்கம்போல் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தின் மொட்டை மாடி பகுதியில் சுத்தம் செய்வதற்காக சென்றபோது அங்கு வேல்முருகன் பக்கவாட்டு சுவற்றில் தூக்கில் தொங்கி கொண்டுடிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேல்முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து அவருடைய மனைவியிடம் கேட்கும்போது அவர் “என் கணவர் 7 ஆண்டுகளாக தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களாக அவருக்கு சம்பளம் வழங்கப்படாததால் நாங்கள் வறுமையில் வாடி வந்தோம். இதனால் தான் என் கணவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என தோன்றுகிறது” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.