நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திகாதேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து கல்லூரி மாணவி கார்த்திகாதேவிக்கு பல்வேறு வகையில் டார்ச்சர் கொடுத்துள்ளனர். மேலும் பாடப்பிரிவுகளில் பெயில் செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து கார்த்திகாதேவி தனது பெற்றோருக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோர்கள் சென்று குடியாத்தத்திற்கு கார்த்திகா தேவியை அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென கார்த்திகா தேவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் கார்த்திகாதேவியை உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திகாதேவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குடியாத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.