உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் பகுதியில் பழனிச்சாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மகள் சிவசங்கரி என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவசங்கரிக்கு நீண்ட நாட்களாக குடல் புண் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனாலும் குடற்புண் குணமடையாத காரணத்தினால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனைக் கண்டதும் உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.