வேலூரில் கோவிட் தடுப்பூசிகள் வந்தபிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ், 45 ஆயிரம் பேருக்கு 2- வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த 2 ஆயிரம் கோவேக்சின் மற்றும் 2,500 கோவிசீல்டு தடுப்பூசிகளை இரண்டாவது முறையாக செலுத்தி கொள்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இதனால் இரண்டாவது முறையாக கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு அதிகமான நபர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது 1,700 கோவிசீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றது. மேலும் தடுப்பூசிகள் வேலூர் மாவட்டத்திற்கு வந்தபிறகு 18 வயது மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.