நிவர் புயலின் வேகம் குறைந்துள்ளதால் கரையை கடப்பதில் தாமதம் ஆகும் என சொல்லப்படுகின்றது.
கொஞ்சம் கொஞ்சமாக நிவர் புயலானது கரையை நோக்கி வரக் கூடிய நிலையில் சென்னையில் பல பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்ல மாமல்லபுரம், கடலூர் போன்ற பகுதிகளில் கனமழை என்பது ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய நிலையில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நிவர் நகர்ந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அது வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதி தீவிர புயலாக கரையை கடக்கும் நிவர் சென்னையில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கு தென் கிழக்கு திசையிலும், கடலூரில் இருந்து 90 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில், புதுச்சேரியில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
தற்போது அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு நிவர் புயலின் நகரும் வேகம் 16 கிலோ மீட்டரில் இருந்து 13கிலோ மீட்டராக குறைந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூரிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில் தற்போது 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வடமேற்கு திசையை நோக்கி நிவர் புயல் நகர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் தற்போது 20 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. வேகம் குறைந்தால் கரையை கடப்பதில் காலதாமதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.