நெல்லையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் குற்றவியல் நீஎதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் கண்ணபிரான். இவர் தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின்படி தினமும் காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணபிரான் கையெழுத்து போட சென்றபோது அவரை ஒரு கும்பல் துரத்தி சென்றுள்ளது. இதனால் பதறிப்போன அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இருப்பினும் அந்த கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை காவல்நிலையம் முன்பு வீசி உள்ளது.
மேலும் கண்ணபிரான் வீடு பக்கத்திலும் இரண்டு குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். 4 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையம் முன்பு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிதறிக் கிடந்த பொருளை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடி வந்துள்ளனர். இதையடுத்து பிரவீன் ராஜ், ராஜசேகர், அழகர், விக்ரம் ஆகிய 4 பேரும் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை நீதிபதி சுசிலா 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.