தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கும் குடமுழுக்கை தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்த இந்து சமய அறநிலைத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரிய கோவிலில் நடைபெறும் குடமுழுக்கை தமிழில் திருமுறைகளை ஓதி நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்ததோடு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் குடமுழுக்கை நடத்த இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது. மேலும் வரும் திங்கட்கிழமை மதுரை உயர் நீதிமன்றத்தில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது இதனை அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவிக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்திருக்கிறது.