சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து பேனர் வைத்த ஜெயகோபால் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேள்வியெழுப்பியிருந்தது.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பேனர் வைத்த முக்கிய குற்றவாளியான முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் செப் 14-ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். மேலும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் பிரிவு விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மாயமானார். அதன்பிறகு வழக்கு பதிவு செய்தும் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்ப, அதற்கு தமிழக அரசு விரைவில் ஜெயகோபால் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தது.
அதை தொடர்ந்து காவல்துறையினர் ஜெயகோபாலை தீவிரமாக தேடி வந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சொகுசு விடுதியில் ஓய்வு எடுத்து வந்த ஜெயகோபாலை 14 நாட்களுக்கு பின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டது சற்று ஆறுதல் தருகிறது என்று சுபஸ்ரீ தாயார் கீதா பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஜெயகோபால் தாமதமாக கைது செய்யப்பட்டாலும் கைது நடவடிக்கை சற்று ஆறுதல் தருகிறது. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் கைது செய்த காவல் துறைக்கு நன்றி என்று தெரிவித்தார்.