ஜார்கண்ட் மாநிலம் ஜம்செத்பூர் அருகே உள்ள மலை கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் புலிக்கு பயந்து வில்-அம்பு, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்றுவருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம், ஜம்செத்பூரில் உள்ள காட்ஷிலா மற்றும் மிரிகிடாங் கிராமங்கள் சுமார் 8 கி.மீ. பரப்பளவுக்கு அடர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றன. இக்கிராமத்திலிருந்து கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டுமானால் வனப்பகுதி வழியே ஆபத்தான முறையில் பயணிக்கவேண்டியுள்ளது.இந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாக வனத்துறையினர் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதன் காரணமாக அங்குள்ள கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகள் உள்பட அனைத்து வசதியும் கிடைக்கப் பெறாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
புலிகள் நடமாட்டம் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பள்ளிக்கு மாணவர்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்ததை அடுத்து, ஆசிரியர்களின் வலியுறுத்தலின் பேரில் தற்போது வில்-அம்பு, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று திரும்புகின்றனர்.புலி நடமாட்டத்தை தீவிரமாகக் கண்காணித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருவதாக அம்மாநில வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், புலிகளைக் கூண்டு வைத்துப் பிடிக்கவும் முயற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.