விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எலுமிச்சை விவசாயிகள் சங்க தலைவர் பிரேம்குமார் தலைமையில் விவசாயிகள் ரங்கசாமி, மாரியப்பன், பொன்ராஜ் உள்பட விவசாயிகள் ஆகியோர் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 2020-21-ம் ஆண்டுக்கான விடுபட்ட பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும், 2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு விரைவில் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் தரமற்ற விதைகள் விற்பனையை தடுத்து, தரமான விதைகளை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து உதவி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் செப்டம்பர் 1-ந் தேதி கோவில்பட்டி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.