Categories
அரசியல்

தி.மு.க ஆட்சிக்கு எதிராக சாலை மறியல்…. கூட்டணிக்கட்சி எம்எல்ஏ-வால் பரபரப்பு…..!!!

திமுக ஆட்சியை எதிர்த்து சாத்தூர் தொகுதியில் ம.தி.மு.க எம்எல்ஏ ரகுராமன் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கிறார்.

விருதுநகரில் இருக்கும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் கீழராஜகுலராமன் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு பண்டகசாலையில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் முதலமைச்சர் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு பொருட்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த நியாய விலை கடையின் விற்பனையாளர் முறைகேடு செய்கிறார் என்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் தனசேகரனிடம் புகார் அளித்த மக்களை, அவர் இனரீதியாக கடும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். எனவே, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரான ம.தி.மு.கவை சேர்ந்த, ஏ ஆர்ஆர் ரகுராமனிடம் மக்கள் கூறியுள்ளனர்.

அதன்பிறகு, அவர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டார். அதனைத்தொடர்ந்து, அவர்களோடு சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார். ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளத்திற்கு செல்லும் சாலையில் கீழராஜகுலராமன் பகுதியில் இரண்டு மணி நேரங்களாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதனால் போக்குவரத்து அதிகமாக பாதித்தது. அதன்பிறகு வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலரான சிவானந்தமும், ராஜபாளையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளரான  ராமகிருஷ்ணனும், ரகுராமனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியப்பிறகே போராட்டம் கலைக்கப்பட்டது.

Categories

Tech |