திருவாரூர்: மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விடுதியைவிட்டு வெளியேற்றும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரை அடுத்த நீலக்குடியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து இன்று மாலை திடீரென்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் உருவ பொம்மையை மாணவர்கள் எரித்துள்ளனர்.
இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு தொடர் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் அறிவித்தது மட்டுமல்லாமல் விடுதியில் தங்கிருக்கும் மாணவர்களையும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.
விடுதியிலிருந்து வெளியேற மறுத்து மாணவ மாணவியர் நள்ளிரவில் போராட்டம்
இந்த உத்தரவினால் வெளி மாநில மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவ மாணவியர் நள்ளிரவில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.