முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றது. கொரோனா பரவ தொடங்கியதாக செய்திகள் வந்ததையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி)யின் விலை தாறுமாறாக இருந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில்முக கவசம் மற்றும் கிருமி நாசினி மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் நிலையில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஏராளமான புகார்கள் வந்தது. 2 நாட்களுக்கு முன்பு கூட முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்னை செய்த கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்தது.
இந்நிலையில் தற்போது ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக கவசம் , சனிடைசரை அதிக விலைக்கு விற்பனை செய்வதை முற்றிலும் முடக்கும் வகையில் தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதில் முக கவசம் மற்றும் கிருமி நாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.