Categories
மாநில செய்திகள்

“10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு என்ன அவசரம்… தேர்வை அரசு ஒத்திவைக்கணும்”… ஸ்டாலின் கண்டனம்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதியான பின்பு தேர்வு நடத்த வேண்டும். தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் மனரீதியாக தயார் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். அனைவரையும் மனரீதியாக தயார் செய்த பிறகு தேர்வு தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 1- மொழிப்பாடம், ஜூன் 3- ஆங்கிலம், ஜூன் 5- கணிதம், ஜூன் 6- விருப்ப மொழிப் பாடம், ஜூன் 8- அறிவியல், ஜூன் 10- சமூக அறிவியல், ஜூன் 12- தொழிற்பாடம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 லட்சத்து 45 ஆயிரத்து 006 மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அதில் 4,74,844 பேர் மாணவர்கள், 4,70,155 பேர் மாணவிகள் மற்றும் 7 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைவாசிகள் 144 பேரும் 10ம் வகுப்பு தேர்வு எழுத இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதே போல் மார்ச் 26ல் நடைபெறவிருந்த 11ம் வகுப்பு கடைசி தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மார்ச் 24ம் தேதி 12ம்வகுப்பு தேர்வை எழுதாத மாணவர்கள் ஜூன் 4ம் தேதி அந்த தேர்வை எழுதலாம் என கூறியுள்ளார். தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சுகாதார வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் எனவும், மாணவர் சமூக இடைவெளியுடனே தேர்வு அறையில் அமர வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதியான பின்பு தேர்வு நடத்த வேண்டும் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |